கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,
முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை,
வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்,
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்
திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப!
தன் எவ்வம் கூரினும், நீ செய்த அருள் இன்மை
என்னையும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர்ப் பழி கூறல் தான் நாணி;
கூரும் நோய் சிறப்புவும், நீ செய்த அருள் இன்மை
சேரியும் மறைத்தாள், என் தோழி -அது கேட்டாங்கு,
'ஓரும் நீ நிலையலை' எனக் கூறல் தான் நாணி;
நோய் அட வருந்தியும், நீ செய்த அருள் இன்மை
ஆயமும் மறைத்தாள், என் தோழி - அது கேட்டு
மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி;
என ஆங்கு,
இனையன தீமை நினைவனள் காத்தாங்கு,
அனை அரு பண்பினான், நின் தீமை காத்தவள்
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்
மருந்து ஆகி செல்கம், பெரும! நாம் விரைந்தே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework