அகவினம் பாடுவாம் தோழி! - அமர்க் கண்நகை மொழி, நல்லவர் நாணும் நிலை போல்,
தகை கொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ,
முகை வளர் சாந்து உரல், முத்து ஆர் மருப்பின்
வகை சால் உலக்கை வயின் வயின் ஓச்சிப்,
பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி,
அகவினம் பாடுவாம், நாம்.
ஆய் நுதல், அணி கூந்தல், அம் பணைத் தட மென் தோள்
தேன் நாறு கதுப்பினாய்! - யானும் ஒன்று ஏத்துகு -
வேய் நரல் விடர் அகம் நீ ஒன்று பாடித்தை;
கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல்,
எடுத்த நறவின் குலை அலங்கு காந்தள்
தொடுத்த தேன் சோரத், தயங்கும் - தன் உற்றார்
இடுக்கண் தவிர்ப்பான் மலை;
கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து,
மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே -
தொல் எழில் தோய்ந்தார் தொலையின், அவரினும்
அல்லல் படுவான் மலை;
புரி விரி, புதை துதை, பூத் ததைந்த தாழ் சினைத்
தளிர் அன்ன எழில் மேனி தகை வாட, நோய் செய்தான்
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம்;
விண் தோய் வரைப், பந்து எறிந்த அயா வீடத்,
தண் தாழ் அருவி, அரமகளிர், ஆடுபவே -
பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை;
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற
கடுஞ் சூல் வயாவிற்கு அமர்ந்து, நெடுஞ் சினைத்
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் - 'உற்றாரின்
நீங்கலம்' என்பான் மலை;
என நாம்,
தன் மலை பாட, நயவந்து கேட்டு அருளி,
மெய் மலி உவகையன் புகுதந்தான் - புணர்ந்து ஆரா
மென் முலை ஆகம் கவின் பெறச்
செம்மலை ஆகிய மலை கிழவோனே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework