அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொளவிரிந்து ஆனாச் சினை தொறூஉம், வேண்டும் தாது அமர்ந்து ஆடிப்,
புரிந்து ஆர்க்கும் வண்டொடு, புலம்பு தீர்ந்து எவ்வாயும்,
இரும் தும்பி, இறைகொள எதிரிய வேனிலான் -
துயில் இன்றி யாம் நீந்தத், தொழுவை அம் புனல் ஆடி,
மயில் இயலார் மரு உண்டு, மறந்து அமைகுவான் மன்னோ -
'வெயில் ஒளி அறியாத விரி மலர்த் தண் காவில்
குயில் ஆலும் பொழுது' எனக் கூறுநர் உளர் ஆயின்?
பானாள் யாம் படர் கூரப் பணை எழில் அணை மென் தோள்
மான் நோக்கினவரொடு மறந்து அமைகுவான் மன்னோ -
'ஆனாச் சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லைத்
தேன் ஆர்க்கும் பொழுது' எனத் தெளிக்குநர் உளர் ஆயின்?
உறலி யாம் ஒளி வாட, உயர்ந்தவன் விழவினுள்
விறல் இழையவரோடு விளையாடுவான் மன்னோ -
'பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து
அறல் வாரும், வையை' என்று அறையுநர் உளர் ஆயின்?
என ஆங்கு,
தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் - தகைபெற,
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி - பணிபு நின்
காமர் கழல் அடி சேரா
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework