பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச்செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின்,
தணிவு இல் வெம் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும்
பிணி தெறல் உயக்கத்த பெருங் களிற்று இனம் தாங்கும்
மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பகத்,
துணி கயம் துகள் பட்ட தூங்கு அழல் வெஞ்சுரம்-
'கிளி புரை கிளவியாய்! நின் -அடிக்கு எளியவோ,
தளி உறுபு அறியாவே, காடு!' எனக் கூறுவீர்!
வளியினும் வரை நில்லா வாழு நாள், நும் ஆகத்து
அளி என உடையேன் யான்; அவலம் கொண்டு அழிவலோ?
'ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய்! நீ உணல் வேட்பின்,
ஆறு நீர் இல' என, அறன் நோக்கிக் கூறுவீர்!
யாறு நீர், கழிந்தன்ன இளமை, நும் நெஞ்சு என்னும்
தேறு நீர், உடையேன் யான், தெருமந்து ஈங்கு ஒழிவலோ?
'மாண் எழில் வேய் வென்ற தோளாய்! நீ வரின், தாங்கும்
மாண் நிழல் இல ஆண்டை மரம்' எனக் கூறுவீர்!
நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன்; நும்
தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலே?
என ஆங்கு,
'அணை அரு வெம்மைய காடு' எனக் கூறுவீர்;
கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடைப்
பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப்
பிணையும் காணிரோ? பிரியுமோ, அவையே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework