செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போலஎரி மேய்ந்த கரி வறல் வாய் புகுவ காணாவாய்ப்,
பொரி மலர்ந்தன்ன பொறிய மட மான்,
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட,
மரல் சாய மலை வெம்ப, மந்தி உயங்க,
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை,
ஊறு நீர் அடங்கலின், உண் கயம் காணாது,
சேறு சுவைத்துத், தம் செல் உயிர் தாங்கும்
புயல் துளி மாறிய, போக்கு அரு, வெஞ்சுரம் -
எல் வளை! எம்மொடு நீ வரின், யாழ நின்
மெல் இயல் மேவந்த சீறடித், தாமரை,
அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக்
கல் உறின், அவ்வடி கறுக்குந அல்லவோ?
நலம்பெறு சுடர் நுதால்! எம்மொடு நீ வரின்,
இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள்,
துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய், மற்று ஆண்டை
விலங்கு மான் குரல் கேட்பின், வெருவுவை அல்லையோ?
கிளி புரை கிளவியாய்! எம்மொடு நீ வரின்,
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி கவின் வாட,
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின், அவ் எழில் வாடுவை அல்லையோ?
என ஆங்கு,
அனையவை காதலர் கூறலின், 'வினை வயின்
பிரிகுவர்' எனப் பெரிது அழியாது, திரிபு உறீஇக்,
கடுங்குரை அருமைய காடு எனின், அல்லது,
கொடுங் குழாய்! துறக்குநர் அல்லர் -
நடுங்குதல் காண்மார், நகை குறித்தனரே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework