எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல்உறித் தாழ்ந்த கரகமும், உரை சான்ற முக்கோலும்,
நெறிப்பட சுவல் அசைஇ, வேறு ஓரா நெஞ்சத்துக்
குறிப்பு ஏவல் செயல் மாலைக், கொளை நடை அந்தணீர்!-
வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர்; இவ் இடை
என் மகள் ஒருத்தியும், பிறள் மகன் ஒருவனும்,
தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர்;
அன்னார் இருவரை காணிரோ?- பெரும!
காணேம் அல்லேம், கண்டனம், கடத்து இடை;
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய
மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர்;
பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலை உளே பிறப்பினும், மலைக்கு அவை தாம் என் செய்யும்?
நினையும்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை,
நீர் உளே பிறப்பினும், நீர்க்கு அவை தாம் என் செய்யும்?
தேரும்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழ் உளே பிறப்பினும், யாழ்க்கு அவை தாம் என் செய்யும்?
சூழும்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
என ஆங்கு,
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
அறம் தலை பிரியா ஆறும் மற்று அதுவே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework