ஆறு அறி அந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து,தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக்,
கூறாமல் குறித்ததன் மேல் செல்லும், கடும் கூளி,
மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய்! கேள் இனி;
படு பறை பல இயம்பப், பல் உருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடும்கால், கோடு உயர் அகல் அல்குல்
கொடிபுரை நுசுப்பினாள், கொண்ட சீர் தருவாளோ?
மண்டு அமர் பல கடந்து, மதுகையால் நீறு அணிந்து,
பண்டரங்கம் ஆடும்கால், பணை எழில் அணை மென்தோள்
வண்டு அரற்றும் கூந்தலாள், வளர் தூக்கு தருவாளோ?
கொலை உழுவைத் தோல் அசைஇக், கொன்றைத்தார் சுவல் புரளத்
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்கால்,
முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ?
என ஆங்கு,
பாணியும் தூக்கும் சீரும் என்று இவை
மாண் இழை அரிவை காப்ப,
ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework