மானிட வாழ்க்கை நலமாக, இன்பமாக இயங்க அன்பு தேவை. கடவுள் மனிதனுக்கு என்று தனியே அளித்தது அன்பு ஒன்றுதான். அன்பு, உள்ளங்களை இணைக்கும் – ஆற்றலுடையது. "ஆற்றல் மிக்க அன்பு" என்பார் அப்பரடிகள். இந்த அன்பு வளருந்தன்மையுடையது. அன்பின் உணர்ச்சிக்கு எல்லை கிடையாது; நிபந்தனை கிடையாது.

இந்த அன்பு தம்முடன் பழகுவோரின் இயல்புகளை அறிவது, அவர்தம் இயல்புக்கு ஏற்றவாறு தம் பழக்கங்களை, பழகும் நெறிமுறைகளை விருப்பத்துடன் ஏற்றுக் கொள்வதற்காக! தம்முடன் பழகுவோரின் விருப்பங்களை அறிந்து அவர்தம் பாங்குக்கு ஒத்துப் பழகினால்தான் அன்பு வளரும்; உறவு வளரும். "ஒத்தறிவான்" என்று திருக்குறள் கூறும். மற்றவர் தம்முடன் ஒத்துப்போக வேண்டும் என்றே விரும்புவர். இவர்களின் ஆன்மாவின் உயிர்ப்பாகிய அன்பு இல்லை.

ஆன்மா எப்போதும் மற்றவர்களை நோக்கியே விரியும். உடல் எப்போதும் சுயநலத்தையே நாடும். ஆன்மாவின் ஆதிக்கத்தில் உடல் இயங்கினால் அன்பு, உறவு, தியாகம் எல்லாம் இருக்கும். அப்படி இல்லாது உடலின் ஆத்திக்கத்தில் ஆன்மா அடங்கிக் கிடந்தால் தன்னலம் மிக்கே விளங்கும்.

தூய அன்பு விரிவடையும். தம்முடன் பழகுவோரின் இயல்பறிந்து பங்கறிந்து பழகுந்திறனில் வளரும். அவர் தம் தேவையறிந்து உதவும். அவர்தம் வாழ்வுக்காகத் தன் வாழ்வு அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று கருதும். இந்த நிலை அன்பு முதிர்ந்து ஆர்வம் என்ற நிலைக்கு உயர்ந்த நிலை. "அன்பினை எடுத்துக் காட்ட அளவிலா ஆர்வம் பொங்கி" என்பது சேக்கிழார் திருவாக்கு.

ஆர்வம் என்பது முறுகி வளர்வது. அன்பு, ஆர்வத்தைத் தருகிறது. ஆர்வம் நட்பைத் தருகிறது. அன்பு நிறைந்த பழக்கத்திலே தோன்றி ஆர்வத்தினால் வளர்க்கப்பெற்று நட்பு என்ற நிலையை அடைகிறது. நட்பு நிலைக்கு இணையான வாழ்க்கை நிலை – உறவு இந்த உலகிலும் இல்லை; வேறு எந்த உலகிலும் இல்லை.

நட்புக்கு மறுபெயர் தோழமை. நட்பு இதயத் தூய்மையுடையது. நட்பு எல்லையற்றது; அழிவற்றது. அதனால் திருவள்ளுவர் "சிறப்பு" என்று சிறப்பித்துக் கூறுகிறார். "சிறப்பு" என்ற சொல் உயர்வற உயர்ந்த உயர் நலத்தைக் குறிப்பதாகும். அதுவும் எத்தகைய சிறப்பு? எளிதில் நாடிப் பெறுதலுக்கு இயலாத சிறப்பு!

"அன்புஈனும் ஆர்வ முடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு" (திருக்குறள் – 74)

இத்திருக்குறள் உளவியல் வாய்ப்பாட்டில் அமைந்தது. உளதாகிய அன்பு வளரும். அன்பு வளர்ந்தால் ஆர்வம் என்ற உள்நெகிழ்வைத் தரும். ஆர்வம் தன்னை மறக்கச் செய்யும். பழகுவோரின் இயல்பறிந்து அவர் தம்முடன் விருப்பத்துடன் பழகி நட்பினை அடைய வளர்த்து உயர்த்தும்.

அன்புக்கும் நட்புக்கும் இடையில் இணையாக இருப்பது ஆர்வம். ஆர்வத்தினை உளவியலார் Aptitude என்பர். தமிழிலக்கியம், பாங்கு என்று கூறும்.

Add a comment

இந்த உலகம் பொருள்களால் ஆயது. பொருள்கள் தம்முள் வேறுபட்ட தனித்தன்மைகள் உடையன. சில பொருள்கள் வேறுபட்டு விளங்கினாலும் பிறிதொரு பொருளுடன் ஒன்றும் இயல்புடையன. சில தனித்தன்மை பெற்றே விளங்குவன.

மாந்தர் வாழ்க்கை பொருள்களுடன் தொடர்புடையது வாழ்வின் துறைதோறும் வாழ்வு முழுவதும் பொருள்களுடன் யாதானும் ஒரு உறவு இல்லாமால் வாழ்க்கை அமைவதில்லை; அமையாது; அமைதல் முடியாது. அதனால் தான் திருக்குறள், 'பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்றது.

பொருள்களால் ஆயது வாழ்க்கை. இந்தப் பொருள்களை பொருளின் தன்மைகளை உள்ளவாறறிந்து அப்பொருள் தன்மைக்கு ஏற்பவும் வாழ்க்கைக்குரிய வகையிலும் பயன்படுத்த அறிந்து கொள்ள வேண்டும். பொருள்களின் தன்மையறிதலுக்குத் தனித்திறனும் பயிற்சியும், அறிவும் வேண்டும். பல பொருள்கள் தோற்றமான நிலையிலேயே தொடர்ந்து இருப்பதில்லை. மாறும் தன்மை உடையன உண்டு. சில பொருள்கள் நிலையாயின போலத் தோன்றும்; பெயர் பெற்று விளங்கும்.

ஆனால் நிலையில்லாதவனாகிப் போதலும் உண்டு. சில நன்மை தருவது போலக் காட்டி துன்பம் தரும், சில துன்பம் தருவது போலக் காட்டி இன்பம் தரும். சான்றாக நமது உடலுக்கு "மெய்" என்று பெயர். அனால், இது உண்மையல்ல. காலத்தால் கேடுறுதலாம். சர்க்கரை இனிமையானது. சர்க்கரையால் விளைவது பெருந்துன்பம். வெந்தயம் கசப்பான பொருள். ஆனால் வாழ்க்கைக்கு நலம் தருவது; இன்பம் தருவது.

குளிர்ச்சியானவையாக இருப்பவை சூட்டையே தருகின்றன. சூடாக இருப்பவை குளிர்ச்சியையே தருகின்றது. ஆதலால் பொருளின் தோற்றம் பார்க்காமல் பொருளின் தன்மை, அப்பொருளால் விலையும் பயன் ஆகியன தெரிந்து அதற்கேற்பப் பயன்படுத்தல் வேண்டும். இத்தகு அறிவு சராசரி மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஞானிகளுக்கே உண்டு.

சாதாரண மக்கள் தோற்றதால் கவர்ச்சிக்கப்படுவர். தற்காலிகமானவையாக இருப்பினும் உடனடியாக பலன்களை எதிர்பார்ப்பர். எப்பொருளையும் ஆழ்ந்து நோக்குவதில்லை. வேளாண்மைக்குப் பயன்படும் இரசாயன உரங்கள் உரமே இல்லை.

இரசாயன உரங்கள் ஒருவகைத் தூண்டு சக்தியேயாகும். ஆனால் நமது மக்கள் இவைகளை உரம் என்று நம்பினார்கள்; இந்த உரத்தையே நம்பி, குப்பை உரம் தயாரிப்பதை மறந்தார்கள். இதனால் நிலத்தின் பூசாரம் குறைந்ததுதான் மிச்சம். அறியாமை அறிவாக ஏற்றுக் கொள்ளப்படுதல் இன்றைய பெரு வழக்கு. இதற்கு அப்பரடிகள் ஒரு கதை கூறி விளக்கினார்.

ஆமை சாப்பிடும் மக்கள், ஆமையை உலைப் பானையில் இட்டு வேக வைத்தார்கள். உலைப் பானையில் தண்ணீர் இளஞ்சூடாக இருக்கும் பொழுது ஆமை இன்ப போதையில் துள்ளி விளையாடும். ஆனால் அந்தச் சூடு இன்பமாக இருக்கும் பொழுது நீடிக்கப் போவதில்லை. விரைவில் கொதி நிலை மாறும்; ஆமை அழியும்.; இதனை உணரும் சக்தி ஆமைக்கு இல்லை. ஆமைக்கு மட்டுந்தானா? மனிதர்களில் பலர் இப்படிதான் வாழ்கின்றனர்.

பெரும்பான்மையான மக்கள் காலப்போக்கில் துன்பம் விளவிப்பனவற்றையே இன்பமெனக் கருதி வாழ்ந்து ஏமாற்றத்திற்கு ஆளாகின்றனர். இதனைத் திருவள்ளுவர்,

"எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" (திருக்குறள் – 355) என்றார்.

Add a comment

மனிதன் பிறப்பதில்லை; மனிதன் உருவாக்கப்படுகின்றான். இதுவே அறிவியல் உண்மை. மனிதனை உருவாக்குவதில் கல்வி வகிக்கும் பாத்திரம் மிகமிகப்பெரியது. கல்வியின் இலட்சியமே மனிதனை உருவாக்குவதுதான்! அதனால் மனிதனை உருவாக்கும் கல்வியினும் விழுமியது இல்லை.

மனிதனின் பொறி, புலன்களைப் பயனுடையனவாக்கி வாழ்க்கையை வளர்த்து விளக்கமுறச் செய்வது கல்வியே! மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். மனிதனின் ஆற்றல் கல்வியின் மூலமே இனங்காணப் பெற்றுச் செயலாக்கத்திற்குப் பயன்படு நிலைக்குக் கொணரப்படுகிறது! ஏன் கல்வியே ஆன்மாவின் சிறந்த உணவு.

திருக்குறள் 'கற்க' என்று பேசுகிறது. ஆம்! கல்வி கற்பது மனிதர்களின் பழக்கமும் வழக்கமும் ஆக வேண்டும். கற்றல் பலவகை. அவற்றுள் எளிமையானது, முதன்மையானது தன்னைச் சுற்றியிருக்கும் உலகத்தைக் கூர்ந்து நோக்குவதன் மூலம் கற்பது.

"கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவான்" என்பது பழமொழி. கண்டது = கண்ணால் கண்ட இயற்கைக் காட்சிகளையே கற்பது. இங்ஙனம் கற்ற பாடங்களையே ஐசக் நியூட்டனின் 'புவி ஈர்ப்பு ஆற்றல்' கண்டுணரப் பெற்றது என்பதறிக.

அடுத்து அவரவர் சொந்த வாழ்க்கையின் பட்டறிவு வழி பெறும் கல்வி அறிவு. இந்தக் கல்வி தனி முயற்சியில்லாமல் வாழ்க்கையின் வழியிலேயே கற்கப் பெறுவது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றிதோல்விகள் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் ஒட்டி உறவாடி வாழ வேண்டிய இடத்தில் முரண்பாடுகள் தோன்றுதல், நம்பிக்கையின்மை வளர்தல் ஆகியன வாழ்வியலுக்கு நல்லவையல்ல.

மனிதர்களிடையில் மன முறிவுகள் தோன்றுவதும் அவ்வழி மனித உறவுகள் பாதிக்கப்படுவதும் ஏற்க இயலாத ஒன்று. அன்றாடம் வாழ்ந்த வாழ்க்கைப் பாங்கைத் திறனாய்வு செய்து, திறனாய்வு வழி வாழ்நிலைகளை அறிந்து கடைபிடித்தல் சிறந்த கல்வி.

மூன்றாவது, நூல்களைக் கற்பதன் மூலம் பெறும் அறிவு. இந்தக் கல்வி முறை தான் இன்று பரவலாகப் பின்பற்றப்படுகிறது. மக்கள் மத்தியில் நடைமுறையில் இருப்பதும் இந்தக் கல்வியே! இந்தக் கல்வியை மக்கள் பெறுவதற்காக நாடு செலவழிக்கும் காலமும் பணமும் அளவிடற்கரியது.

ஆயினும் போதிய பயன் இல்லை; ஏன்? கல்வி முறையே காரணம். இன்றைய கல்வியில் சிந்தனைக்கு வாய்ப்பில்லை; செயலுக்குரிய வாய்ப்பு மிக மிகக் குறைவு. கல்வி கற்றதனால் எந்த ஒரு தனித்தகுதியும் வந்தடைந்ததாக இல்லை. ஏன்? கற்கும் ஆர்வம் கூட இல்லை.

திருக்குறள் 'கற்க' என்று கூறுகின்றது. ஆம்! கற்பது – இடையீடில்லாது தொடர்ந்து கற்பது மனிதனின் கடமை; ஏன் கற்க வேண்டும்? மனிதன் அளப்பரிய ஆற்றலுடையவன். அவன் எண்ணிய செயல்களைச் செய்ய முடியும். ஆயினும் அவனுடைய அகநிலைக் குற்றங்களாகிய அச்சம்,பயத்திலிருந்து விடுதலை பெற்றால் தான் கற்கும் கல்வி பயன்தரும்.

"கசடறக் கற்பவை கற்க" என்றது திருக்குறள். "கசடு" – மனக்குற்றங்கள். மனக்குற்றங்களை நீக்கும் மருந்து கருத்துக்கள் தாம். கருத்துக்கள் பெரும்பாலும் நூல்கள் வாயிலாகவே கிடைக்கும். கற்க வேண்டிய நூல்களைத் தேடிக்கற்ற பிறகு அக்கருத்துக்கள் வழி நடந்து அக்கருத்துக்களுக்கு உரிமையுடயராதல் வேண்டும்.

Add a comment

அறிவு, மானுட வாழ்க்கையை இயக்கும் ஒரு சிறந்த கருவி. இன்று பலர் கருதுவது போல அறிவு என்பது தகவல்கள் அல்ல. செய்திகள் அல்ல. அறிவு ஒரு கருவி(instrument) துன்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கருவி. செவி வழிக்கேட்கும் செய்திகளை, அவற்றில் உள்ள நன்மை, தீமைகளை ஆய்வு செய்வது அறிவு. ஏற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை மட்டும் ஏற்பது அறிவுடைமை.

அதுபோல, இந்த உலகில் உள்ள பொருள்களைச் சார்ந்தது தான் வாழ்க்கை. சில பொருள்கள் நல்லன போலத் தோன்றும்! ஆயினும் தீமையே பயக்கும்!

காட்சியில் வேறாகவும் அனுபவத்தில் வேறாகவும் காணப்படும் பொருள்களின் தன்மையை ஆராய்ந்து எடுத்துக் கொள்ளுதலே அறிவுடைமை. அறிவு பல்வகைப் பிரிவாக வளர்ந்து இந்த உலகின் துறைகள் அனைத்தையும் செழிக்கச் செய்கின்றது. இது பகுத்தறிவு முதன்மையானது.

பகுத்தறிவு மாந்தர் அனைவருக்கும் உரியது. ஆனால், பலர் பகுத்தறிவைப் பயன்படுத்துவதில்லை. அறிவு வளர்ந்தே ஞானம் தருகிறது. ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கைக்கு அறிவே மூலதனம். இந்த உலகில் பெறக்கூடிய பேறுகள் யாவற்றிலும் சிறந்தது அறிவுடமையேயாம். அறிவுடையார் எல்லாச் செல்வங்களும் உடையவர்.

"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்றது திருக்குறள். அறிவு கல்வியால் பெற இயலும்! ஆனால், கல்வி கற்றவர் எல்லாம் அறிவுடையராவர் என்று எண்ணற்க. கற்றவர்களிலும் அறிவில்லாதவர் உண்டு. கற்ற கல்வி, கருத்து வாழ்க்கையில் சோதனைப்படுத்தப் படும் பொழுது தான் அறிவு உருவாகிறது. அறிவு – பகுத்தறிவே இந்த உலகைப் புரிந்து கொள்ளவும் இந்த உலகில் சிறப்புற வாழ்ந்திடவும் துணை செய்கிறது.

அறிவு, முற்காப்புக் கருவியாகவும் தொழிற்படுகிறது. அதாவது, துன்பம் வந்து தாக்காமல் நெறியில் உய்த்துச் செலுத்துவது அறிவு. இனி எதிர்வரும் காலத்திலும் துன்பம் வந்தணையாமல் காப்பதும் அறிவுதான்! வாழ்க்கை ஒரு அரியகொடை; வைப்பு; இந்த வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்ந்து சிறப்புற்றிட அறிவு தேவை. அறிவு காட்டும் வழியில் வாழ்தலே வாழ்வு. "மேலான சக்தி" களை நம்புவதில் பயனில்லை.

அறிவு ஒரு போதும் தீமை செய்யாது. அறிவுக்குக் கொடுக்கும் விலை சிறந்த மூலதனம். அறிவுடையார்கள் பலவீனர்களாக இருக்க மாட்டார்கள். அதனால், சூழ்நிலைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். சூழ்நிலைகளைக் கடந்தும் சூழ்நிலைகளை உண்டாக்கிக் கொண்டும் வளரும் தன்மை அறிவுடையவர்களுக்கு உண்டு.

இயற்கை அறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது நூலறிவு. நூலறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது ஆய்வியல் சார்ந்த அறிவு. ஆராய்ந்து அறிந்த, அறிவுக்குப் பெயர் நுண்ணறிவு. நுண்ணறிவுக்கு ஆக்கம் சேர்ப்பது பட்டறிவு. இங்ஙனம் வாழ்க்கையின் வாயில்கள் தோறும் வளர்ந்து செழுமைப்படுவது அறிவு.

Add a comment

உடல் ஒரு அற்புதமான கருவி. உடம்பில் உயிர் இயங்குகிறது. உடற்கருவி வாய்க்காது போனால் உயிர் இயக்கம் இல்லை. நுகர்வு இல்லை. அறிவு இல்லை. உயிர் வாய்பாக அமையாது போனால் உடல் பயனற்றது. உடல் உயிருடன் இணைந்திருக்கும் பொழுதுதான் பெயர். உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டால் பெயர் போய்விடுகிறது. பிணம் என்ற புதுப்பெயர் வருகிறது.

வாழ்வதற்கு இந்த வாழ்க்கையை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். வாழ்வாங்கு வாழ வேண்டும். முழுமையாக வாழ்தல் வேண்டும். உடல் – உயிர் சார்ந்த வாழ்க்கைக்குப் புலன்கள் முதன்மையானவை.

புலன்கள் மூளையின் சார்புடையன. மூளையின் இருப்பு தலை. "எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்" என்பர். உடலுக்கு வாய்த்துள்ள கருவிகள் இரு வகையின. ஒன்று அறிவுகருவிகள். இவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகியன. பிறிதொன்று செய்கருவிகள். இவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன.

மனம் ஆற்றல் வாய்ந்த கருவி. காற்றைவிட வேகமாகச் செல்லும் தன்மையது. ஆனால், எங்கு, ஏன் போகிறோம் என்று அதற்குத் தெரியாது. தெரிந்து கொள்ளவும் ஆசைப்படுவதில்லை. இந்தப் பணியை புத்திதான் செய்கிறது. மனம் பற்றும் செய்திகளை ஆய்வு செய்து எடுத்துக் கொள்வதுதான் புத்தியின் வேலை. ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் புத்தி அளவுக்கு வளர்வதில்லை. மனத்தளவிலேயே நின்று விடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படுவார்கள்; வாழத் தெரியாதவர்கள். சித்தம் சிந்திப்பது.

சிந்தனை மனிதரின் சிறந்த அகநிலைத் தொழிற்பாடு! சித்தம் மிக மிக நுண்மையான பகுதியைக்கூட ஆய்வு செய்து, உண்மைகளைக் கண்டுபிடிக்கும்; ஆழமான உண்மைகளைக் கண்டுபிடிக்கும். அகங்காரம் என்பது முடிவு செய்யும் உறுப்பு. எடுக்கப்பெறும் முடிவுகள் மெய், வாய், கண், மூக்கு, செவிகள் வாயிலாகச் செயற்பாடுறும். இது உடலியக்கம்.

உடலியக்கத்திற்கு உடலோடு கூடி வாழ்தலுக்கு இயற்கை, கால எல்லை நியதி செய்திருக்கிறது. மிகப்பெரிய சாதனைகள் செய்யக்கூடிய ஆற்றல் உடையது இந்த வாழ்க்கை. இந்த வாழ்கையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மானுட வாழ்க்கையின் காலம், ஆற்றல் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.

புத்தி, ஆழமான உண்மைகளைக் காணுதல் வேண்டும். கண்கள் அறிவார்ந்த நெடிய தொலைநோக்குப் பார்வை பெற வேண்டும். கைகள் உழைக்கும் கரங்களாக விளங்க வேண்டும். இந்த உடல் நோய்களால் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கப் பெற வேண்டும். கதிரொளியில் தோய்தலும், காற்றில் உலாவுதலும் உடலுக்கு நல்லது.

உடல், ஒரு உழைப்புச் சாதனம் – கருவி. இந்த உடலுக்குப் போதிய உழைப்புத் தராது போனாலும் நோய் வரும். உடல், உழைப்பில் ஈடுபடுத்தப் பெறுதல் வேண்டும். உடலுக்கு இசைந்த உழைக்கும் ஆற்றலைத் தரக்கூடிய நல்ல உணவு தேவை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக நல்ல எண்ணங்கள் வேண்டும். நல்ல எண்ணங்கள் நல்ல நினைவுகள் இல்லாத வாழ்க்கை நச்சுத்தன்மை அடைந்துவிடும்.

மேலும் சிறப்பாக உயிருக்கு உயிராக விளங்கும் கடவுளிடம் பேசி மகிழ வேண்டும். இவையெல்லாம் அமைந்து நலமுற வாழ்தல் அறிவியல் சார்ந்த வாழ்க்கை. வாழ்வாங்கு வாழ்வோம்! வையத்திற்கு அணியாக வாழ்வோம்!

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework