தன்னடக்கம் என்பது வளர்ச்சிக்குரிய மூளை. தன்னடக்கம் எனினும் பணிவு எனினும் ஒரு பொருள் தரும் என்பது பிழையாகாது. ஆயினும் நிறைவாகாது. பலர் அடக்கம் உடையோராக இருப்பர். அதன் காரணமாக அவர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கிவிடுவர். சில சமயங்களில் ஒதுங்கி வாழ்தல் தன் முனைப்பு வளரவும் துணை செய்து விடுகிறது. ஆதலால், பலரோடு பழகிப் பணிவும் இன்சொலும் உடையோராக விளங்கினால் அடக்கமுடைமை முழுமை அடைகிறது. நாம் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகின்றோம்? இதுதான் கேள்வி. வளர்ச்சியின் ஆரம்பம் வணக்கத்தில் இருக்கிறது என்பது நியதி.

அடக்கமுள்ளவர்களிடம் பிழைகள் காண்பது அரிது. ஏன்? அடக்கமுள்ளவர்கள் பலரோடு பழகுவதால் பக்குவமும் முதிர்ச்சியும் எளிதில் கிடைக்கும்.

தன்னடக்கம் இரு பெரும் பிரிவுகள் உடையது. அவை, பொறி அடக்கம்; புலன் அடக்கம் எனப்படும். பொறியடக்கமாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையடக்குதல். இப்பொறிகளை இயக்கும் புலன்களை அடக்குதல் புலனடக்கம்.

இவற்றுள் நாவடக்கம் தலையாயது. நாவடக்கம் இரண்டு வகைப்படும். முதலாவது நினைத்தபடி பேசாமை. இரண்டாவது உணவடக்கம். உணவடக்கம் உடலுக்கு நலம் பயக்கும். உடல் நலமுறின் பொறியடக்கமும் புலனடக்கமும் எளிதில் சித்திக்கும். உடல் நலத்துக்கும் சீரான இயக்கத்துக்குமே உணவு; சுவைக்கல்ல. விரும்பி அளவோடு சுவைக்கத் தேவை, அவ்வளவுதான் சுவையின் பயன். அல்லது உணவு உண்ணும் ஆர்வத்தை தூண்ட சுவை பயன்படலாம்.

நிறைய பேச – சொல்ல ஆசைப்படக்கூடாது. அதிகமாகப் பிறரிடம் கேட்கும் மனப்பாங்கு வேண்டும். "சில சொல் பேசுதலும் பல கேட்கக் காமுறுதலும்" வளர்ச்சிக்குரிய பண்பு. அதனாலன்றோ, கேட்கும் பணிக்கு மட்டுமே இரண்டு காதுகள் உள்ளன. பேசுவது, உண்பது ஆகிய இரண்டு பணிகளுக்கு ஒரே வாய். அந்தப் பேச்சும்கூட மற்றவர்கள் கருத்தை வாங்கத்தக்க வகையில் பேசினால் மிகமிக நன்று.

இன்றைய உலகம் வாயினால் கெட்டு வருகிறது. நாட்டில் கண்டபடி உணவுச் சாலைகள், மது உட்பட உள்ளன. சந்து பொந்து, சாவடி எங்கும் கூடிக்கூடி ஊர் வம்பு பேசியே காலத்தைக் கழிக்கும் மாந்தர்களின் எண்ணிக்கை மிகுதி. இது போதாது என்று மேடை வேறு போட்டுப் பேசுகிறார்கள். சேரிப்புறத்து அணியாக இருந்த ஏச்சு, அரங்கேறியுள்ளது அவ்வளவுதான்! இது வாழ்வியலன்று. யாரிடமும் பணிவாக இருப்பது, தன் முனைப்பு அற்று இருப்பது, தேவைக்கேற்பச் சிக்கனமாகப் பேசுவது, இவையே அடக்கமுடைமை.

Add a comment


மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப்பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கதிற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கதிற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள் இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.

ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது. மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.

"உலகம் வேண்டுவது ஒழுக்கமே! சுயநலம் தீய ஒழுக்கம்! சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!"

என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.

நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.

நாடுகள் சுதந்திரம் பெற்றபின் "குடிமைப் பயிற்சி" என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.

நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

குடிமைப் பண்பிலாதார்,ஒருமைப்பாட்டுணர்வு இலாதார். உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

ஒன்றே குலம்; எல்லோரும் ஒருகுலம்; எல்லோரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல், உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் – இதுவே ஒழுக்கம்.

இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல். உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

இந்த நல்லொழுக்கதிற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

Add a comment

பொறுத்தாற்றல், பண்புகள் அனைத்திற்கும் மேம்பட்ட பண்பாகும். பொறுத்தாற்றல் பண்பால் பகைமை தடுக்கப்படுகிறது; திருத்தங்கள் காண்பதற்குரிய வாயில்கள் தோன்றுகின்றன; வலிமையும் தகுதியும் வளர்கின்றன. மகிழ்ச்சியின் திறவுகோலாகப் பொறுத்தாற்றும் பண்பு விளங்குகிறது.

உணர்ச்சிவசப்படுதல், அளவுக்கும் அதிகமான தன்மானம், பெருமை ஆகியன பற்றிக் கவலைப்படுதல், தேவையில்லா ஒரு மதிப்புபுணர்ச்சியைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுதல் ஆகியன பொறுத்தாற்றும் பண்புக்குத் தடையானவை. சில நாள் பொறுத்திருந்தாலே பல சாதனைகள் செய்யலாம். காலம் கருதிக் காத்திருப்பின் சல்லடையில்கூடத் தண்ணீர் எடுத்துச் செல்ல இயலும். ஆம்! தண்ணீர் பனிக்கட்டியாக உறையும்வரை காத்திருக்க வேண்டும்.

வாழ்க்கையின் இயல்பே கூடிச்சேர்ந்து வாழ்தல்தான் அதுவே மானுட சாதியினுடைய படைப்பின் நோக்கம். கூடிவாழ்தல் எளிதான செயலா? அம்மம்ம! உயிர்க்குலம் அனைத்தினோடும் கூடக் கூடி வாழ்தல் இயலும். பாம்பினைப் பழக்கிடலாம். ஆனால், மனிதர்களுடன் சேர்ந்து வாழ்வது எளிமையான காரியமன்று!

மானுட ஜாதி தன் பயணத்தைத் தொடங்கிய நாளிலிருந்தே சண்டை போடுதலைத் தொடங்கிவிட்டது. ஆம்! கலகங்களையும் சண்டைகளையும் நேரிடும் அவமானங்களையும் கண்டு வருந்துதல் கூடாது. திருத்தங்கள் காண முயலவேண்டும். குற்றங்களுக்குத் திருத்தம் காணும் முயற்சியிலேயே கூட்டுறவு வெற்றிபெற இயலும். திருத்தம் காண இயலாது போனால், பொறுமையாக இருந்தாக வேண்டும். சண்டைபோட்டுக் கொள்வதும் பிரிவதும் விரும்பத்தக்கதல்ல.

பொறுத்தாற்றும் பண்பை வளர்த்து உறுதிபடுத்துவது நம்மை வளர்த்துக் கொள்வதேயாகும். வலிமை, தூய்மை யாரிடம் இருக்கிறதோ அவர்களை எந்த இழிவும் சென்றடையாது. அவதூறுகள் நெருப்பிடை வீழ்ந்த உமியெனக் கருகிப்போம். சிலர் கோழை என்று கூறி ஆறுதல் பெறுவார். அதனால் நமகென்ன குறை?

குப்பை கூளம் இல்லாத இடத்தில் நெருப்பு பற்றி எரியுமா என்ன? ஆதலால் பொருத்தாற்றும் பண்பைப் பெற வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; தூய்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதிகள் பலவற்றையும் முயன்று அடைய வேண்டும்.

இப்படி வளர்ந்த நிலையில் காட்டும் பொறுமைதான் பொறுமை; வலிமை சார்ந்த பொறுமை. தகுதி மிகுதியும் உடையோரின் பொறுமையே வாழ்வளிக்கும்; வையகத்தின் வரலாற்றை இயக்கும் திருக்குறள்,

"மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல்." என்று கூறி வழிநடத்துகிறது.

ஆம்! மற்றவர் பழிதூற்றினால் அதனால் உண்மையில் விளைவது; தகுதியில்லாதவராக இருந்தால் சினம், பகை, கலகம்; தகுதிமிகுதியும் உடையோராக இருந்தால் திருத்தம் காண முயற்சி செய்வர்; பழிதூற்றுவாரையும் வாழ்த்துவர்.

பரபரக்க வேண்டாம்; உணர்ச்சி வேண்டாம்; தேர்ந்து தெளிக! குப்பைகள் அகற்றப்பட வேண்டியவையே! குப்பைகள் உடைய இடங்கள் அகற்றப்படுவன அல்ல; அகற்றவும் இயலாது. குற்றங்களைத் திருத்துக. பயன் கொள்ள முயலுக. இவ்வழி பொறுத்தாற்றும் பண்பு வளரும்; நாளும் குற்றங்களிலிருந்து விடுதலை பெறுக; வளர்க! வலிமை பெற்றுயர்ந்திடுக; தகுதிகள் பலவும் பெற்று உயர்ந்திடுக; எல்லாரும் அணைவர். கூடி வாழ்ந்திடலாம். கோடி நன்மை பெறலாம்.

Add a comment

நிலம் கொத்துதல், உழுதல், தோண்டுதல் ஆகிய செயல்களின் வழி, துன்புறுத்துப்படுவது. உலகில் மாந்தர் வாழ்வியலுக்குரிய செயற்பாடு. ஆனால், நிலம் கொத்தப்பட்டும், வெட்டப்பட்டும் துன்புறுத்தப் படுவதனால்தான் நிலம், நிலத்தின் தன்மையை இழக்காமல் பாதுகாத்துக் கொள்கிறது.

கொத்தி உழப்பெறாத நிலம் மண் அரிப்பு நோய்க்கு இரையாகும். அது மட்டுமின்றி நிலம் உழப்பெற்றாலே வான் மழையின் நீரை வாங்கித் தன் மடியில் வைத்துக் கொள்ளும் ஆற்றலைப் பெறுகிறது; பசுமைப் புரட்சி செய்யும் ஆற்றலைப் பெறுகிறது.

உலகுயிர்க்கெல்லாம் உணவு அளித்துக் காப்பாற்றும் வேள்வியை நிலம் செய்ய முடிகிறது. நிலம் தன்னை அகழ்ந்து தரும் துன்பத்தினையே தனக்கு ஆக்கமாக மாற்றிக் கொள்கிறது; உழுவாரையும் வாழ்விக்கிறது. நிலத்தின் பொறுமை, ஆக்கமாகிறது; உயிர்க்குலத்தின் வாழ்வாகிறது.

மனிதனும் பொறுத்தாற்றும் பண்பு காத்தல் வேண்டும். பொறுத்தாற்றுவோரை அறியாதார் கோழை என்று ஏளனம் செய்வர். அதனால் என்ன? தீமை வராது; நன்மையே பெருகி வளரும்! கூளம் குப்பைதான் தீக்கு ஆக்கம் – தீமையுடையார் தான் தீமைக்கு ஆக்கம். பொறையுடையோர் முன் தீமை அழியும். நம்மில் வலியோர் தூற்றினால் பொறுத்துக் கொள்வது போலவே நம்மில் கீழோர் தூற்றினாலும் பொறுத்துக் கொள்வதே உண்மையான பொறையுடைமை; பொறுத்தாற்றும் பண்பு.

பிரார்த்தனைக்கு ஈடானது பொறுத்தாற்றும் பண்பு. எல்லை கடந்த நிலையில் நமக்குப் பிறர் இன்னாதான செய்யும் பொழுது காட்டப்படுவதே பொறுத்தாற்றும் பண்பு – ஏன்? பொறுத்தாற்றும் நெறியின் வழி விதியைக் கூட வெல்லலாம். தீமைக்கும் தீவினைக்கும் வாயில் சினமே!

சினம் தவிர்த்துப் பொறுமை மேற்கொண்டொழுகின் தீயவினையும் அதாவது போகூழையும் ஆகூழாக மாற்றலாம். பொறுத்தாற்றும் பண்பு வெற்றிகளைத் தரும். நிலத்தினைப் பார்ப்போம். நிலத்தின் பொறுத்தாற்றும் பண்பை நமது அணியாக ஏற்போம்! நமக்கு இன்னாதான செய்வோரையும் ஏற்போம்! நமக்கு இன்னாதன செய்வோரையும் ஏற்போம்! வாழ்விப்போம்!

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. – திருக்குறள்

Add a comment

அழுக்காறு – அழுக்கு நிறைந்த வழி. அதாவது நன்மையும் இன்பமும் இல்லாத வழி. இத்தகு அழுக்கு வழியில் வாழ்தல் வளர்ச்சிக்குத் துணை செய்யாது. இனியவை கூறல் பற்றிப் பல குறட்பாக்கள் இயற்றிய திருவள்ளுவர். "அழுக்காறு என ஒரு பாவி" என்று அழுகாற்றினைத் திட்டுகிறார்.

ஆம்! அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. மாறாகத் தீமையைத் தரும். இந்த அழுக்காறு தான் மக்கள் மத்தியில் "பொறாமை" என்று பேசப்படுகிறது. அதாவது மற்றவர்களின் ஆக்கத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமை பொறுத்துப் போற்ற முடியாமை அழுக்காறு ஆகும்!

ஆனால் இன்று பலர் நல்லவைகளில் – கல்வியில் பொறாமைப்படலாம். தீமையன்று என்று அறியாமல் கூறுகின்றனர். இது தவறு. ஒருவர் நன்மை செய்வதில் அழுக்காறு கொள்பவன், நன்மை செய்ய முனைப்புக் கொள்ள மாட்டான். அழுக்காறு நிறைந்த உள்ளத்தியல்பும், நன்மை செய்வதில் ஊக்கம் காட்டாது என்றே திருக்குறள் கூறுகிறது.

நஞ்சு, அமுதாவது ஏது? சாக்கடை நன்னீராவது ஏது! அதுபோலவே தான் நல்ல மதிப்பெண் வாங்கும் மாணவனைப் பார்த்து குறைந்த மதிப்பெண் வாங்குபவன் அழுக்காறு கொண்டால் கூடுதல் மதிப்பெண் வாங்கும் முயற்சியில் ஈடுபடமாட்டான். அதற்கு மாறாக அதிக மதிப்பெண் வாங்கியவன் மீது குற்றங்களை, குறைகளைக் கற்பித்துக் கூறுவான். ஏன் ‘காப்பியடித்து’ விட்டான் என்றே கூறுவான். மேலும் ‘மோசமாகி’ ஆசிரியர், கையூட்டுப் பெற்றுவிட்டார் என்று கூடக் கூறுவான். ஆதலால், எந்த வகையிலும் அழுக்காறு தீதே.

அழுக்கற்றை அகற்றும் வழி, நல்லவர்களை – வாழ்பவர்களைப் பாராட்டி மகிழ்வதுதான். அதோடு பெற்றவைகளைக் கொண்டு மகிழும் மனம் வேண்டும். பெறாதவைகளைப் பெறும் முயற்சியும் வேண்டும். உப்பரிக்கைகளைப் பார்த்துப் புழுங்குதலைத் தவிர்த்து குடிசைகளில் வாழ்பவரை நோக்கி இரக்கங் கொள்ளுதல் வேண்டும். இத்தகு மனப்பான்மை வாழ்க்கைக்கு ஆக்கம் தரும்.

எப்போதும் நல்லவனவற்றையே நாடுதல், நல்லனவற்றைப் பற்றியே பேசுதல் அழுக்கற்றிலிருந்து தப்பும் ஒரு வழி. எங்கும் எதிலும் எவரிடத்திலும் குற்றம் – குறைகள் இருக்கும். எல்லாரும் கடவுளா என்ன? நாம் அவர்களிடத்தில் உள்ள குணங்களையே எடுத்துக் கொள்ள வேண்டும். நல்லவைகளைப் பாராட்ட வேண்டும். நாம் ரோசாச் செடியில் முட்களை எடுக்கக் கூடாது. மலர்களையே எடுக்க வேண்டும்.

அழுக்காறு என்ற தீய குணத்திலேயே மனித குலம் ஒன்றுபட்டு வாழ முடியவில்லை. பகையில் சிக்கித் தவிக்கிறார்கள். அழுக்காறு தனித்தும் நிற்காது. அழுக்காற்றின் படை அவா, வெகுளி இன்னாதன சொல்லல், கலகம் எல்லமேயாம்.

ஆதலால் அழுக்காறு கொண்ட மனிதன் வளர்தல் அரிது; வாழ்தல் அரிது; அதனாலேயே ‘திருச்செற்றுத் தீயுழி உய்த்துவிடும்’ என்றது திருக்குறள். தேளின் கொடுக்கு, நஞ்சாம் தன்மைபோல அழுகாறுடையார் உள்ளம் நஞ்சாகும்.

அழுக்காறு கொள்ளற்க! மற்றவர் வாழ்வதைக்கண்டு மகிழ்க! நீயும் வாழ முயல்க! நல்லனவற்றையே காண்க! நல்லனவற்றையே பேசுக. மற்றவர்கள் ஆற்றலை, அறிவைப் பாராட்டி மகிழ்க! எவரோடும் பழகுக! தோழமை கொள்க! மறந்தும் மற்றவர்களைப் பற்றிப் புழுக்கம் கொள்ளற்க!

Add a comment

பயனாளர் பகுதி

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework