நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி!
பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி!
கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான்.
264

 

திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே
பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும்
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான்
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான்.
265

 

புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற
ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக்
கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல்
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான்.
266
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework