மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே.
355

 

பெண்மை நாண் வனப்புச் சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே.
356

 

உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள்.
357

 

நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள்.
358

 

தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே.
359

 

மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன்.
360

 

கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார்.
361

 

மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான்.
362

 

அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே.
363

 

பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே.
364

 

மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள்.
365

 

சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான்.
366

 

நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள்.
367

 

முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார்.
368
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework