செங் கண் புன் மயிர்த் தோல் திரை செம் முகம்
வெம் கண் நோக்கின் குப்பாய மிலேச்சனைச்
செங் கண் தீ விழியாத் தெழித்தான் கையுள்
அம் கண் போது பிசைந்து அடு கூற்று அனான்.
431

 

கூற்றின் இடிக்கும் கொலை வேலவன் கோவலர் வாய்
மாற்றம் உணர்ந்து மறம் கூர் கடல் தானை நோக்கிக்
காற்றின் விரைந்து தொறு மீட்க எனக் காவல் மன்னன்
ஏற்றை அரி மான் இடி போல இயம்பினானே.
432

 

கார் விளை மேகம் அன்ன கவுள் அழி கடாத்த வேழம்
போர் விளை இவுளித் திண் தேர் புனைமயிர்ப் புரவி காலாள்
வார் விளை முரசம் விம்ம வான் உலாப் போந்ததே போல்
நீர் விளை சுரி சங்கு ஆர்ப்ப நிலம் நெளி பரந்த அன்றே.
433

 

கால் அகம் புடைப்ப முந்நீர்க் கடல் கிளர்ந்து எழுந்ததே போல்
வேல் அகம் மிடைந்த தானை வெம் சின எயினர் தாக்க
வால் வளை அலற வாய் விட்டு இரலையும் துடியும் ஆர்ப்பப்
பால் வளைந்து இரவு செற்றுப் பகலொடு மலைவது ஒத்தார்.
434

 

வில் பழுத்து உமிழ்ந்த வெய்ய வெம் நுனைப் பகழி மைந்தர்
மல் பழுத்து அகன்ற மார்பத்து இடம் கொண்டு வைகச் செந்நாச்
சொல் பழுத்தவர்க்கும் ஆண்மை சொல்லலாம் தன்மைத்து அன்றிக்
கொல் பழுத்து எரியும் வேலார் கொடுஞ் சிலை குழைவித்தாரே.
435

 

வாள் படை அனுங்க வேடர் வண் சிலை வளைய வாங்கிக்
கோள் புலி இனத்தின் மொய்த்தார் கொதி நுனைப் பகழி தம்மால்
வீட்டினார் மைந்தர் தம்மை விளிந்த மா கவிழ்ந்த திண் தேர்
பாட்டு அரும் பகடு வீழ்ந்த பனிவரை குனிவது ஒத்தே.
436

 

வென்றி நாம் கோடும் இன்னே வெள்ளிடைப் படுத்து என்று எண்ணி
ஒன்றி உள் வாங்குக என்ன ஒலி கடல் உடைந்ததே போல்
பொன் தவழ் களிறு பாய்மா புன மயில் குஞ்சி பிச்சம்
மின் தவழ் கொடியொடு இட்டு வேல் படை உடைந்த அன்றே.
437

 

பல்லினால் சுகிர்ந்த நாரில் பனிமலர் பயிலப் பெய்த
முல்லை அம் கண்ணி சிந்தக் கால் விசை முறுக்கி ஆயர்
ஒல் என ஒலிப்ப ஓடிப் படை உடைந்திட்டது என்ன
அல்லல் உற்று அழுங்கி நெஞ்சில் கட்டியங் காரன் ஆழ்ந்தான்.
438

 

வம்பு கொண்டு இருந்த மாதர் வன முலை மாலைத் தேன் சோர்
கொம்பு கொண்டு அன்ன நல்லார் கொழுங் கயல் தடங் கண் போலும்
அம்பு கொண்டு அரசர் மீண்டார் ஆக் கொண்டு மறவர் போனார்
செம்பு கொண்டு அன்ன இஞ்சித் திருநகர்ச் செல்வ என்றார்.
439
Go to top