சுரமை நாட்டுப் போதனமா நகரம்

சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.


நகரத்தின் அமைதி

சங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த
அண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்
நங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.


அகழியும் மதிலரணும்

செஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்
மஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்
தஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்
வெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.


அம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு

இரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்
கரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்
அரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற
கரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்


மாடங்களின் மாண்பு

மானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்
தேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்
கானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்
வானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.

இதுவுமது - வேறு

அகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்
முகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்
துகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்
இகலின மலையொடு மாட மென்பவே.

மாடங்களின் சிறப்பு

கண்ணெலாங் கவர்வன கனக கூடமும்
வெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்
தண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ
மண்ணினா லியன்றில மதலை மாடமே.


மாடத்திற் பலவகை ஒலிகள்

மாடவாய் மணிமுழா விசையு மங்கையர்
ஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்
பாடுவார் பாணியும் பயின்று பல்கலம்
முடிமா ணகரது முரல்வ தொக்குமே


வண்டுகளின் மயக்கம்

தாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்
மாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்
றியாழவா மின்குர லாலித் தார்த்தரோ
ஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.

கடைத்தெரு

பளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை
விளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்
துளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்
வளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.

சிலம்பொலிக்கு மயங்குஞ் சிறுஅன்னங்கள்

காவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்
பாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்
தூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென
வாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.


அரசர் தெருவழகு

விலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்
நலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய
அலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்
புலத்திடைத் தாமரை பூத்த போலுமே.

செல்வச் சிறப்பு

கண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்
வெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்
வண்ணவான் மல்லிகை வளாய மாலையும்
அண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.

மாளிகைகளில் உணவுப்பொருள்களின் மிகுதி

தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே.

இன்ப உலகம்

மைந்தரு மகளிரு மாலை காலையென்
றந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்
சுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக
ரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.


பயாபதி மன்னன் மாண்பு

மற்றமா நகருடை மன்னன் றன்னுயா
ஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்
பொற்றியான் பயாபதி யென்னும் பேருடை
வெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே


பயாபதி மன்னன் சிறப்பு

எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
அண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.

மக்கட்குப் பகையின்மை

நாமவே னரபதி யுலகங் காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலித தில்லையே.


குடிகளை வருத்தி இறை கொள்ளாமை

ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே
மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.


மன்னனின் முந்நிழல்

அடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்
முடிநிழன் முனிவரர் சரண முழ்குமே
வடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்
குடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.


இருவகைப்பகையும் அற்ற ஏந்தல்

மன்னிய பகைக்குழா மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்
தன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ


அரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்

மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்
நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா
ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே
போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்


அரசர் சுற்றத்தின் இயல்பு

கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்
றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா
நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்
அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.

அரசியர்


மற்றவன் றேவியர் மகர வார்குழைக்
கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்
இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய
முற்றுறா முலையினார் கலையின் முற்றியார்


அரசியர் இயல்பு

பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்
செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்
வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்
அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார்


காமம் பூத்த காரிகையர்

காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்
தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்
தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்
வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.


பட்டத்து அரசிகள் இருவர்

ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்
மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்
சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்
றேயுரை யிலாதவ ரிருவ ராயினார்


பெருந்தேவியர் இருவரின் பெற்றி

நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்
ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்
வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி
தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்


மங்கையர்க்கரசியராகும் மாண்பு

பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன
தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்
மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்
தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.


இவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்

பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்
மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்
திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல
இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார்


மன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்

மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்
இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்
கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட
முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே


மங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்

சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி
மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்
பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்
கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.


மாலாகி நிற்கும் மன்னன்

மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி
அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்
செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்
தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்


முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்
கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி
மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே.



இரண்டாவது நகரச்சருக்கம் முடிந்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework