ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயினான.
1
ஞ ந ம வ இயையினும் உகரம் நிலையும். 2
நகர இறுதியும் அதன் ஓரற்றே. 3
வேற்றுமைக்கு உக் கெட அகரம் நிலையும். 4
வெரிந் என் இறுதி முழுதும் கெடுவழி
வரும் இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை.
5
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே. 6
ணகார இறுதி வல்லெழுத்து இயையின்
டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
7
ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை. 8
ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. 9
விண் என வரூஉம் காயப் பெயர்வயின்
உண்மையும் உரித்தே அத்து என் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில் வரு காலை.
10
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 11
கிளைப்பெயர் எல்லாம் கொளத் திரிபு இலவே. 12
வேற்றுமை அல்வழி எண் என் உணவுப் பெயர்
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே.
13
முரண் என் தொழிற்பெயர் முதல் இயல் நிலையும். 14
மகர இறுதி வேற்றுமை ஆயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே.
15
அகர ஆகாரம் வரூஉம் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்தே.
16
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே
செல் வழி அறிதல் வழக்கத்தான.
17
இல்லம் மரப்பெயர் விசைமர இயற்றே. 18
அல்வழி எல்லாம் மெல்லெழுத்து ஆகும். 19
அகம் என் கிளவிக்குக் கை முன் வரினே
முதல்நிலை ஒழிய முன்னவை கெடுதலும்
வரை நிலை இன்றே ஆசிரியர்க்க
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.
20
இலம் என் கிளவிக்குப் படு வரு காலை
நிலையலும் உரித்தே செய்யுளான.
21
அத்தொடு சிவணும் ஆயிரத்து இறுதி
ஒத்த எண்ணு முன் வரு காலை.
22
அடையொடு தோன்றினும் அதன் ஓரற்றே. 23
அளவும் நிறையும் வேற்றுமை இயல. 24
படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்
தொடக்கம் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை ஆயின் உருபு இயல் நிலையும்
மெல்லெழுத்து மிகுதல் ஆவயினான.
25
அல்லது கிளப்பின் இயற்கை ஆகும். 26
அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்
எல்லாம் எனும் பெயர் உருபு இயல் நிலையும்
வேற்றுமை அல் வழிச் சாரியை நிலையாது.
27
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 28
உயர்திணை ஆயின் உருபு இயல் நிலையும். 29
நும் என் ஒரு பெயர் மெல்லெழுத்து மிகுமே. 30
அல்லதன் மருங்கின் சொல்லும் காலை
உக் கெட நின்ற மெய்வயின் ஈ வர
இ இடை நிலைஇ ஈறு கெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப் பால் மொழிவயின் இயற்கை ஆகும்.
31
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 32
ஈமும் கம்மும் உரும் என் கிளவியும்
ஆ முப் பெயரும் அவற்று ஓரன்ன.
33
வேற்றுமை ஆயின் ஏனை இரண்டும்
தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை-
34
வகாரம் மிசையும் மகாரம் குறுகும். 35
நாட்பெயர்க் கிளவி மேல் கிளந்தன்ன
அத்தும் ஆன்மிசை வரை நிலை இன்றே
ஒற்று மெய் கெடுதல் என்மனார் புலவர்.
36
னகார இறுதி வல்லெழுத்து இயையின்
றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
37
மன்னும் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.
38
சுட்டு முதல் வயினும் எகரம் முதல் வயினும்
அப் பண்பு நிலையும் இயற்கைய என்ப.
39
குயின் என் கிளவி இயற்கை ஆகும். 40
எகின் மரம் ஆயின் ஆண்மர இயற்றே. 41
ஏனை எகினே அகரம் வருமே
வல்லெழுத்து இயற்கை மிகுதல் வேண்டும்.
42
கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல. 43
மீன் என் கிளவி வல்லெழுத்து உறழ்வே. 44
தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின்
மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்தே
வல்லெழுத்து மிகு வழி இறுதி இல்லை.
45
மெல்லெழுத்து மிகினும் மானம் இல்லை. 46
மெல்லெழுத்து இயையின் இறுதியொடு உறழும். 47
இறாஅல் தோற்றம் இயற்கை ஆகும். 48
ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே. 49
மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந் நாற் சொல்லும் தொழிற்பெயர் இயல.
50
வேற்றுமை ஆயின் ஏனை எகினொடு
தோற்றம் ஒக்கும் கன் என் கிளவி.
51
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறை வரின்
முதற்கண் மெய் கெட அகரம் நிலையும்
மெய் ஒழித்து அன் கெடும் அவ் இயற்பெயரே.
52
ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயர் ஒற்று அகரம் துவரக் கெடுமே.
53
சிறப்பொடு வரு வழி இயற்கை ஆகும். 54
அப் பெயர் மெய் ஒழித்து அன் கெடு வழியே
நிற்றலும் உரித்தே அம் என் சாரியை
மக்கள் முறை தொகூஉம் மருங்கினான.
55
தானும் பேனும் கோனும் என்னும்
ஆ முறை இயற்பெயர் திரிபு இடன் இலவே.
56
தான் யான் எனும் பெயர் உருபு இயல் நிலையும். 57
வேற்றுமை அல் வழிக் குறுகலும் திரிதலும்
தோற்றம் இல்லை என்மனார் புலவர்.
58
அழன் என் இறுதி கெட வல்லெழுத்து மிகுமே. 59
முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவிமிசை றகரம் ஒற்றல்
தொல் இயல் மருங்கின் மரீஇய மரபே.
60
பொன் என் கிளவி ஈறு கெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கின் தொடர் இயலான.
61
யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத்து இயையின் அவ் எழுத்து மிகுமே.
62
தாய் என் கிளவி இயற்கை ஆகும். 63
மகன் வினை கிளப்பின் முதல் நிலை இயற்றே. 64
மெல்லெழுத்து உறழும் மொழியுமார் உளவே. 65
அல்வழி எல்லாம் இயல்பு என மொழிப. 66
ரகார இறுதி யகார இயற்றே. 67
ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய் பெறத் தோன்றும்.
68
சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும். 69
பீர் என் கிளவி அம்மொடும் சிவணும். 70
லகார இறுதி னகார இயற்றே. 71
மெல்லெழுத்து இயையின் னகாரம் ஆகும். 72
அல்வழி எல்லாம் உறழ் என மொழிப. 73
தகரம் வரு வழி ஆய்தம் நிலையலும்
புகர் இன்று என்மனார் புலமையோரே.
74
நெடியதன் இறுதி இயல்புமார் உளவே. 75
நெல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல.
76
இல் என் கிளவி இன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும்
இயற்கை ஆதலும் ஆகாரம் வருதலும்
கொளத் தகு மரபின் ஆகு இடன் உடைத்தே.
77
வல் என் கிளவி தொழிற்பெயர் இயற்றே. 78
நாயும் பலகையும் வரூஉம் காலை
ஆவயின் உகரம் கெடுதலும் உரித்தே
உகரம் கெடு வழி அகரம் நிலையும்.-
79
பூல் வேல் என்றா ஆல் என் கிளவியொடு
ஆ முப் பெயர்க்கும் அம் இடை வருமே.
80
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 81
வெயில் என் கிளவி மழை இயல் நிலையும். 82
சுட்டு முதல் ஆகிய வகர இறுதி
முற்படக் கிளந்த உருபு இயல் நிலையும்.
83
வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும். 84
மெல்லெழுத்து இயையின் அவ் எழுத்து ஆகும். 85
ஏனவை புணரின் இயல்பு என மொழிப. 86
ஏனை வகரம் தொழிற்பெயர் இயற்றே. 87
ழகார இறுதி ரகார இயற்றே. 88
தாழ் என் கிளவி கோலொடு புணரின்
அக்கு இடை வருதல் உரித்தும் ஆகும்.
89
தமிழ் என் கிளவியும் அதன் ஓரற்றே. 90
குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின்
பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும்.
91
பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வே. 92
ஏழ் என் கிளவி உருபு இயல் நிலையும். 93
அளவும் நிறையும் எண்ணும் வரு வழி
நெடு முதல் குறுகலும் உகரம் வருதலும்
கடி நிலை இன்றே ஆசிரியர்க்க.
94
பத்து என் கிளவி ஒற்று இடை கெடு வழி
நிற்றல் வேண்டும் ஆய்தப் புள்ளி.
95
ஆயிரம் வரு வழி உகரம் கெடுமே.- 96
நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடு முதல் குறுக்கம் இன்றே.
97
ஐ அம் பல் என வரூஉம் இறுதி
அல் பெயர் எண்ணும் ஆயியல் நிலையும்.
98
உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது. 99
கீழ் என் கிளவி உறழத் தோன்றும். 100
ளகார இறுதி ணகார இயற்றே.-- 101
மெல்லெழுத்து இயையின் ணகாரம் ஆகும். 102
அல்வழி எல்லாம் உறழ் என மொழிப.- 103
ஆய்தம் நிலையலும் வரை நிலை இன்றே
தகரம் வரூஉம் காலையான.
104
நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்
வேற்றுமை அல் வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டும் மொழியுமார் உளவே.
105
தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல. 106
இருள் என் கிளவி வெயில் இயல் நிலையும். 107
புள்ளும் வள்ளும் தொழிற்பெயர் இயல.- 108
மக்கள் என்னும் பெயர்ச்சொல் இறுதி
தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்தே.
109
உணரக் கூறிய புணர் இயல் மருங்கின்
கண்டு செயற்கு உரியவை கண்ணினர் கொளலே.
110
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework