துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நலம்பெறு திருமணி


கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச்
சாய்அறல் கடுக்கும் தாழ்இரும் கூந்தல்
வேறுபடு திருவின் நின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம் 5
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரைஅகம் நண்ணிக் குறும்பொறை நாடித்
தொ஢யுநர் கொண்ட சிர(று)உடைப் பைம்பொறிக்
கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பின்
புள்ளி இரலைத் தோல்ஊன் உதிர்த்துத் 10
தீதுகளைந்(து) எஞ்சிய திகழ்விடு பாண்டில்
பருதி போகிய புடைகிளை கட்டி
எஃ(கு)உடை இரும்பின் உள்அமைத்து வல்லோன்
சூடுநிலை உற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்(பு)ஆடு மரபின் பருந்(து)ஊ(று) அளப்ப 15
*நலம்பெறு திருமணி* கூட்டு நல்தோள்
ஒடுங்(கு)ஈர் ஓதி ஒள்நுதல் கருவில்
எண்இயல் முற்றி ஈர்அறிவு புரிந்து
சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்
காவற்(கு) அமைந்த அரசுதுறை போகிய 20
வீறுசால் புதல்வன் பெற்றனை இவணர்க்(கு)
அருங்கடன் இறுத்த செருப்புகல் முன்ப
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்வயின்
முழு(து)உணர்ந்(து) ஒழுக்கும் நரைமூ தாளனை
வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் 25
தெய்வமும் யாவதும் தவம்உடை யோர்க்கென
வேறுபடு நனம்தலைப் பெயரக்
கூறினை பெருமநின் படிமை யானே.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework