நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்சென்று வழிப்படூஉம் திரிபுஇல் சூழ்ச்சியிற்,
புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்,
காப்புக் கைந்நிறுத்த பல்வேற் கோசர் 5
இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
வளம்கெழு நன்னாடு அன்னஎன் தோள்மணந்து,
அழுங்கன் மூதூர் அலர்எடுத்து அரற்ற,
நல்காது துறந்த காதலர், 'என்றும்
கல்பொரூஉ மெலியாப் பாடின் நோன்அடியன் 10
அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர்
இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பிற்
குவைஇமில் விடைய வேற்றுஆ ஒய்யும்
கனைஇருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் 15
விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
எழாஅப் பாணன் நன்னாட்டு உம்பர்,
நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
எறிபடை கழீஇய சேயரிச் சின்னீர்
அறுதுறை அயிர்மணற் படுகரைப் போகிச், 20
சேயர்' என்றலின், சிறுமை உற்றஎன்
கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க,
அழாஅம் உறைதலும் உரியம் - பராரை
அலங்கல் அம்சினைக் குடம்பை புல்லெனப்
புலம்பெயர் மருங்கிற் புள்எழுந் தாங்கு, 25
மெய்இவண் ஒழியப் போகி, அவர்
செய்வினை மருங்கிற் செலீஇயர், என் உயிரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework