வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே;
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே; நின்தேர்
முன்இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது 5
ஊர்க, பாக! ஒருவினை, கழிய-
நன்னன், ஏற்றை, நறும்பூண் அத்தி,
துன்அருங் கடுந்திறல் கங்கன், கட்டி,
பொன்அணி வல்வில் புன்றுறை என்றுஆங்கு
அன்றுஅவர் குழீஇய அளப்பு அருங் கட்டூர், 10
பருந்துபடப் பண்ணிப், பழையன் பட்டெனக்,
கண்டது நோனானாகித் திண்தேர்க்
கணையன் அகப்படக் கழுமலம் தந்த
பிணையல்அம் கண்ணிப் பெரும்பூட் சென்னி
அழும்பில் அன்ன அறாஅ யாணர், 15
பழம்பல் நெல்லின் பல்குடிப் பரவை,
பொங்கடி படிகயம் மண்டிய பசுமிளை,
தண்குட வாயில் அன்னோள்
பண்புடை ஆகத்து இன்துயில் பெறவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework