241.
எங்கண் இனையர் எனக்கருதின் ஏதமால்
தங்கண்ணர் ஆயினும் தகவில கண்டக்கால்
வன்கண்ண னாகி ஒறுக்க 'ஒறுக்கல்லா
மென்கண்ணன் ஆளான் அரசு.
242.
சால மறைத்தோம்பிச் சான்றவர் கைகரப்பக்
காலை கழிந்ததன் பின்றையும் - மேலைக்
கறவைக்கன் றூர்ந்தானைத் தந்தையும் ஊர்ந்தான்
'முறைமைக்கு மூப்பிளமை இல்'.
243.
முறைதெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந் தவர்க்கும்
இறைதிரியான் நேரொக்க வேண்டும் - முறைதிரிந்து
நேரொழுகா னாயின் அதுவாம் 'ஒருபக்கம்
நீரொழுகிப் பாலொழுகு மாறு'.
244.
பொருத்தம் அழியாத பூந்தண்டார் மன்னர்
அருத்தம் அடிநிழ லாரை - வருத்தாது
கொண்டாரும் போலாதே கோடல் அதுவன்றோ
'வண்டூதா துண்டு விடல்'.
245.
பாற்பட்டு வாழ்ப எனினும் குடிகள்மேல்
மேற்பட்ட கூட்டு மிகநிற்றல் வேண்டாவாம்
கோல்தலையே யாயினும் கொண்டீக காணுங்கால்
'பாலதலை பாலூறல் இல்'.
246.
அடைய அடைந்தாரை அல்லவை செய்து
கொடைவேந்தன் கோல்கொடியன் ஆகிக் குடிகள்மேல்
கூட்டிறப்பக் கொண்டு தலையளிப்பின் அஃதன்றோ
'சூட்டறுத்து வாயில் இடல்'.
247.
வெண்குடைக்கீழ் வாழும் குடிகட்கு வேந்தனும்
செங்கோலன் அல்லாக்கால் செய்வதென் - பொங்கு
படுதிரைச் சேர்ப்ப மற் 'றில்லையே யானை
தொடுவுண்ணின் மூடுங் கலம்'.
248.
ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால்
களியானை மன்னர்க்கோ கைகடத்தல் ஏதம்
துளியுண் பறவைபோல் செவ்வன்நோற் பாரும்
'எளியாரை எள்ளாதார் இல்'.
249.
மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
உறுமனத்த னாகி ஒழுகின் - செறுமனத்தார்
பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
'ஆயிரம் காக்கைக்கோர் கல்'.
250.
அங்கோல் அவிர்தொடி! ஆழியான ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
வெங்கோன்மை வேந்தர்கள் வேண்டும் சிறிதெனினும்
'தண்கோல் எடுக்குமாம் மெய்'.
251.
மன்னவன் ஆணைக்கீழ் மற்றையார் மீக்கூற்றம்
என்ன வகையால் செயப் பெறுப? - புன்னைப்
பரப்புநீர் தாவும் படுகடல் தண்சேர்ப்ப!
'மரத்தின்கீழ் ஆகா மரம்'.
252.
வழிபட் டவரை வலியராச் செய்தார்
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் - விழுத்தக்க
பையமர் மாலைப் பணைத்தோளாய்! பாத்தறிவென்
மெல்லக் 'கவுட்கொண்ட நீர்'.
253.
தலைமை கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால் நேர்செய் திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும் மென்தோளாய்! அஃதன்றோ 'ஓரறையுள்
பாம்போ(டு) உடனுறையும் ஆறு'.
254.
கூற்றம் உயிர்கொள்ளும் போழ்து குறிப்பறிந்து
மாற்றம் உடையாரை ஆராயா(து) - ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய் ! 'செய்வதென்
வல்லை அரசாட் கொளின்?'
255.
உடைப்பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை
அடக்கமில் உள்ளத்தன் ஆகி - நடக்கையின்
ஒளளியன் அல்லான்மேல் வைத்தல் 'குரங்கின்கைக்
கொள்ளி கொடுத்து விடல்'.
256.
எல்லையொன்(று) இன்றியே இன்னாசெய் தாரையும்
ஒல்லை வெகுளார் உலகாள்வதும் என்பவர்
சொல்லின் வளாஅய்த்தம் தாள்நிழல் கொள்பவே
'கொல்லையுள் கூழ்மரமே போன்று'.
257.
போலந்தார் இராமன் துணையாகத் தான்போந்து
இலங்கைக் கிழவற்(கு) இளையான் - இலங்கைக்கே
போந்திறை யாயதூஉம் பெற்றான் 'பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework