196.
தெருளா தொழுகும் திறனிலா தாரைப்
பொருளால் அறுத்தல் பொருளே - பொருள்கொடுப்பின்
பாணித்து நிற்கிற்பார் யாருளரோ? 'வேற்குத்தின்
காணியின் குத்தே வலிது'.
197.
ஒல்லாத இன்றி உடையார் கருமங்கள்
நல்லவாய் நாடி நடக்குமாம் - இல்லார்க்கு
இடரா வியலும் இலங்குநீர்ச் சேர்ப்ப!
'கடலுள்ளும் காண்பவே நன்கு'.
198.
அருமை யுடைய பொருளுடையார் தங்கண்
கருமம் உடையாரை நாடார் - எருமைமேல்
நாரை துயில்வதியும் ஊர! 'குளந்தொட்டுத்
தேரை வழிச்சென்றார் இல்'.
199.
அருளுடை யாருமற் றல்லா தவரும்
பொருளுடை யாரைப் புகழாதார் இல்லை
பொருபடைக் கண்ணாய் ! அதுவே 'திருவுடையார்
பண்டம் இருவர் கொளல்'.
200.
உடையதனைக் காப்பான் உடையான் அதுவே
உடையானைக் காப்பதூஉம் ஆகும் - அடையின்
'புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும்'.
201.
வருவாய் சிறிதெனினும் வைகலும் ஈண்டின்
பெருவாய்த்தாய் நிற்கும் பெரிதும் - ஒருவாறு
ஒளியீண்டி நின்றால் உலகம் விளக்கும்
'துளியீண்டில் வெள்ளம் தரும்'.
202.
உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதலெனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! - தள்ளாது
அழுங்கல் முதுபதி 'அங்காடி மேயும்
பழங்கன்று ஏறாதலும் உண்டு'.
203.
களமர் பலரானும் கள்ளம் படினும்
வளமிக்கார் செல்வம் வருந்தா - விளைநெல்
அரிநீர் அணைதிறக்கும் ஊர! 'அறுமோ
நரிநக்கிற்(று) என்று கடல்'.
204.
நாடறியப் பட்ட பெருஞ்செல்வர் நல்கூர்ந்து
வாடிய காலத்தும் வட்குபவோ! - வாடி
வலித்துத் திரங்கிக் கிடந்தே விடினும்
'புலித்தலையை நாய்மோத்தல் இல்'

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework