விண்ணகத்தே இரவிதனை வைத்தாலும்
அதன்கதிர்கள் விரைந்து வந்து
கண்ணகத்தே ஒளிதருதல் காண்கிலமோ?
நினையவர் கனன்றிந் நாட்டு
மண்ணகத்தே வாழாது புறஞ்செய்தும்
யாங்களெலாம் மறக்கொ ணாதெம்
எண்ணகத்தே, லாஜபதி! இடையின்றி
நீவளர்தற் கென்செய் வாரே

ஒருமனிதன் தனைப்பற்றிப் பலநாடு
கடத்தியவர்க்கு ஊறு செய்தல்
அருமையில்லை; எளிதினவர் புரிந்திட்டா
ரென்றிடினும் அந்த மேலோன்
பெருமையைநன் கறிந்தவனைத் தெய்வமென
நெஞ்சினுளே பெட்பிற் பேணி
வருமனிதர் எண்ணற்றார் இவரையெலாம்
ஓட்டியெவர் வாழ்வ திங்கே?

பேரன்பு செய்தாரில் யாவரே
பெருந்துயரர்ம் பிழைத்து நின்றார்?
ஆரன்பு நாரணன்பால் இரணியன்சேய்
செய்ததனால் அவனுக் குற்ற
கோரங்கள் சொலத் தகுமோ? பாரதநாட்
டிற்பக்தி குலவி வாழும்
வீரங்கொள் மனமுடையார் கொடுந்துயரம்
பலவடைதல் வியத்தற் கொன்றோ?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework