மறுநாட் காலை முதல் முத்தம்மா பாடு கொண்டாட்டந்தான். வீட்டில் அவளிட்டது சட்டம். அவள் சொன்னது வேதம். சோமநாதய்யர் ஏதேனுமொரு காரியம் நடத்த வேண்டுமென்று சொல்லி, அவள் கூடாதென்றால் அந்தக் காரியம் நிறுத்தி விடப்படும். அவர் ஏதேனும் செய்யக் கூடாதென்று சொல்லி அவள் அதைச் செய்துதான் தீரவேண்டுமென்பளாயின் அது நடந்தே தீரும். இங்ஙனம் முத்தம்மா தன் மீது கொடுங்கோன்மை செலுத்துவது பற்றி அவருக்கு அடிக்கடி மனவருத்தமேற்படுவதுண்டு. ஆனால், அந்த வருத்தத்தை அப்போதப்போதே அடக்கி விடுவார். ''தெய்வத்தினிடம் ஒருவன் உண்மையான பக்தி செலுத்தப் போனால், அது அவனை எத்தனையோ சோதனைகளுக்குட்படுத்தும் என்கிறார்கள். அதினின்றும் ஒருவன் தனது பக்தியைச் சோரவிடுவானாயின், அவன் உண்மையான பக்தனாவனோ? உண்மையான பக்தியால் கடைசியில் எய்தப்படும் பயன்கள் அவனுக்குக் கிடைக்குமோ? நாம் இவளை ப்ரத்ய‡ தெய்வமாகவன்றோ பாவித்து நடத்துகிறோம். எனவே, இவள் ஏது செய்தாலும் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும். நாம் மனவருத்தப்படலாகாது'' என்று தீர்மானித்துத் தம்மைத் தாமே தேற்றிக் கொள்வார். இப்படியிருக்கையில் ஒரு நாள் முத்தம்மா தன் கணவனை நோக்கி:- ''நாளை ஞாயிற்றுக்கிழமை தானே? உங்களுக்கோ கோர்ட்டு வேலை கிடையாது. ஆதலால் நாமிருவரும் குழந்தைகளையும் வேலைக்காரனையும்....

(குறிப்பு:- பாரதியார் இக்கதையைப் பூர்த்தி செய்வதற்குள் காலஞ் சென்றுவிட்டதால், ''சந்திரிகையின் கதை'' முற்றுப்பெற இயலாமல் இப்படியே நிறுத்த வேண்டியதாயிற்று.)

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework